This entry is part 9 of 9 in the series 30 ஆகஸ்ட் 2026

சோம. அழகு

            சற்றும் தொடர்பின்றி அங்கொன்றும் இங்கொன்றுமான யோசனைகள், சிந்தனைகள், எண்ணங்கள் சம்மந்தமே இல்லாத நேரத்தில் யாருக்கேனும் வருவதுண்டா? இல்லை என்றாலும் தயவுசெய்து ‘ஆம்’ என்று கூறி என்னை ஆசுவாசப்படுத்துங்கள்.

1

ஒரு நல்ல மழை நாளில் அவல் கொழுக்கட்டைக்குக் கார சட்னி அரைத்துக் கொண்டிருந்த போது……

            உளவியலை(Psychology) ஒரு புலமாக எடுத்துப் படிப்பவர்களில் அதை விரும்பிக் கற்பவர்கள் பாவம் இல்லையா? எல்லோரையும் போல் இயல்பாக இருக்க மனம் ஆசைப்பட்டாலும் பெரும்பாலான நேரங்களில் எதிர்ப்படும் மனிதர்களின் குண நலன்களைக் பகுப்பாய்வு செய்து அவர்களைக் கணிக்கச் சொல்லி மூளை பணிக்காதா? அத்துறையில் தமது ஆளுமையைச் சோதித்துப் பார்க்கும் ஆவல் அரித்தெடுக்காதா? சமயங்களில் அது தவறாகிப் போனால் தாம் சரியாகக் கற்கவில்லையோ என்ற ஏமாற்றத்தில் விரக்தி வந்து கவிந்து கொள்ளாதா? கொடூரமான மனநிலைகளைப் பற்றி படிக்கும் போது பச்சாதாபம் மேலிட்டுத் தாமே அக்கொடுமைகளுக்கு உள்ளானதைப் போல் ஒரு அதிர்ச்சியான(trauma) மனநிலைக்குச் சென்று விட மாட்டார்களா? எல்லா வகையான மனநோய்களையும் பற்றி கரைத்துக் குடித்தால் உடன் இருப்பவர்களையும் மனம் சதா சர்வ காலமும் அதீதமாக நுண்ணாய்வு செய்து கொண்டே இருக்காதா? கோளாறு(disorder), பித்து(mania), அச்சம்(phobia) – இவற்றின் ஏதோ ஒரு துல்லியமான உட்பிரிவில் தாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் இருத்தி வைக்க முனையாதா மனம்?  இப்படி இருந்தால் எப்படி வாழ முடியும்?

            கிட்டத்தட்ட இதே மாதிரியான வேறு பிரச்சனை தத்துவம்/மெய்யியல்(Philosophy) படிப்பவர்களுக்கும் வருமல்லவா? அறிவியலுக்கு அப்பாற்பட்ட கேள்விகள் மண்டையைக் குடைந்து வீங்க வைக்கும் போது என்ன செய்வார்கள்? ‘கடவுள் இருக்கிறாரா இல்லையா?’, ‘உண்மை என்றால் என்ன? பொய் என்றால் என்ன?’, ‘அறிவு என்று எதைக் கூறுவது?’ போன்ற சொங்கித் தனமான கேள்விகள், ‘வாழ்வின் அடிப்படை நோக்கம் என்ன?’, ‘நான் என்பது யார்/என்ன?’, ‘வெற்றியின் அடுத்த கட்டம் என்ன?’ போன்ற ஆகாசத்தை ஆயாசமாகப் பார்க்க வைக்கும் கேள்விகள் மனதை ஆக்கிரமிக்கும் போது ரொம்ப மூளையைக் கசக்கிச் சட்டென ஒரு புள்ளியில் ‘என்னத்த?’ கண்ணையாவாக மாறிவிட மாட்டார்களா? பிறகு ‘என்னத்த எந்திரிச்சு என்னத்த குளிச்சு என்னத்த கிளம்பி என்னத்த சம்பாதிச்சு………’ என்ற ஆபத்தான நிலையை எட்டிவிட மாட்டார்களா?

            ஆத்தி! எம்புட்டு ஆபத்தான படிப்புகள் இவை?

                                                                        2

இன்னொரு இளவெயில் மாலையில் ஓர் கடற்கரையில்….

அந்நியரோ பழக்கப்பட்டவரோ நம்மிடம் வந்து தமது கஷ்டத்தை/குமுறலை/வருத்தத்தை/ஆதங்கத்தைப் பகிரும் போது “அப்போ அந்த வலி உங்களுக்கு எப்படி இருந்துச்சு?”, “உங்களுக்கு எவ்ளோ கோவம் வந்துச்சு?”, “அந்தச் சூழல்ல எப்படியெல்லாம் மனசு புழுக்கமா இருந்துச்சு?” என்று எதார்த்தத்தில் கேட்டு வைக்க மாட்டோம்தானே? அப்புறம் ஏன் reality showக்களில் மட்டும் மிகச் சர்வ சாதாரணமாக வறட்டுத்தனமாகக் கேட்கிறார்கள்? Reality – எதார்த்தம். அக்கேள்விகள் எதார்த்தமாகவே இல்லையே? முதன்முறை ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் அப்படி கேட்டதைப் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. இன்று அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் அதே கேள்விகள் கேட்கப்படுவது அதிர்ச்சியாக எல்லாம் இல்லை. அருவருப்பாக இருக்கிறது. Emotional Baiting, Evaluative disclosure, Active Facilitation, Schadenfreude Marketing, Voyeuristic moment – கேவலம் TRPக்காகத்தானே? தொகுப்பாளர்களுக்கு Emotainmentல் ஈடுபடும் போதோ ஒருவர் உடைந்து அழும் வரை மேற்கூறிய அபத்தமான கேள்விகள் தம்மிலிருந்து வெளிப்படும் போதோ ஒருவித நாணவுணர்ச்சி/குற்றவுணர்ச்சி மேலிடாதா?

                                                            3

{அளவிற்கு அதிகமாகப் பணம் இருந்தாலும் ‘இன்னும் இன்னும்’ என ஓடிக் கொண்டிருக்கும் பில் கேட்ஸ், அம்பானி போன்று உலகம் முழுதும் இருக்கும் பணக்காரர்கள்; சேர்த்த பணத்தை வைத்து நிம்மதியாக வாழ்வதை விட்டுவிட்டு அடுத்தபடியாக அதிகாரத்தைத் தேடி தொபுக்கடீர் என அரசியல் பக்கம் கரை ஒதுங்குபவர்கள் (குறிப்பாகத் திரையுலகினர்); அதிகாரத்திற்கு வந்த பின் நிகழும் தவறுகளுக்குப் பொறுப்பேற்கும் கெட்ட(!) பழக்கங்களைக் கைவிட்டு யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்று திரியும் சர்வாதிகாரிகள், எதேச்சதிகாரிகள்} – ஓர் உயிரைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொன்றுவிட்டு எவ்விதப் பதட்டமோ உணர்ச்சியோ இல்லாமல் இருக்கும் psychoகளை ஆய்வுக்கு உட்படுத்திப் படிப்பதை(case study) போன்றே மேற்குறிப்பிட்ட இவர்களது பண்புகளையும் கூராய்வு செய்ய வேண்டுமல்லவோ? இல்லை இல்லை! மேற்கூறியவர்களை psycho என்று கூறவில்லை(அதை என் வாயால் எப்படிக் கூறுவேன்?). அவ்வகை வெறியும் (obsession) பித்து மனநிலையும் கூட ஒருவகை மனப்பிறழ்வுதானே? அவ்வகையில் ஆராயும் தகுதி பெற்றவை என்றே கூற வந்தேன்! தப்பிச்சேன்…. 

                                                            4

Heath Ledger! ‘கலைக்காக தன்னையே அர்ப்பணித்த உன்னத கலைஞன்’ என்று சிலர் சிலாகிப்பதைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு மட்டும்தான் அது முட்டாள்தனமாகத் தோன்றுகிறதா? The Dark Knight திரைப்படத்தின் Joker கதாபாத்திரத்திற்காகத் தன்னைத் தயார் செய்யும் பொருட்டு ஆறு வாரங்களாக லண்டனின் ஒரு ஹோட்டல் அறையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். அக்கதாபாத்திரத்தின் பிறழ்வான மனநிலையைத் தன்னுள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் அவரது டைரி குறிப்புகளில் அப்பட்டமாக வெளிப்பட்டதாம் – கோமாளி முகத்திற்கான கோர ஒப்பனைகளுக்கான யோசனைகள், அக்கதாபத்திரத்திற்கான குரூர மனநிலையின் எண்ணவோட்டங்கள் எனப் பல.

அதன் முடிவாக தூக்கமின்மை, மனச்சோர்வு எனத் துவங்கி கடுமையான மனஅழுத்தம், பதட்டம் என பாதிக்கப்பட்டு அதற்கு மாத்திரைகள் எடுக்கத் துவங்கியுள்ளார். தற்செயலாக ஒரு நாள் மருந்தின் அளவு கூடுதலாகி மரணத்தில் முடிந்தது. அந்தக் கதாபத்திரம்தான் அவரைக் கொன்றுவிட்டது என்று நான் தீர்ப்பு எழுதவில்லை. ஆனால் அவரது அப்பயிற்சி முறை தவறு என்கிறேன்.

தன்னை வெகுவாக வருத்தி, அதுவும் உளவியல் ரீதியாகத் தன்னைத் தானே துன்புறுத்தி…. Is it even worth it? ‘கலையை உயிராக மதித்தல்’, ‘கலைக்காக உயிரையே கொடுத்தல்’ – இவையெல்லாம் உயர்வு நவிற்சி அணியே ஒழிய வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எடுத்துக் கொள்ள அல்ல!

                                                            5

நான் மதங்களையும் கடவுள்களையும் நம்பாததற்கு ஏகப்பட்ட காரணங்கள் வைத்திருக்கிறேன். நம்புபவர்கள் “சிறு வயதில் இருந்து போதிக்கப்பட்டது” என்பதைத் தாண்டிய வேறு காரணம் ஏதேனும் வைத்திருப்பார்களா?

நம்பிக்கையாளர்களின் உலகில் நின்று பார்த்தால் கூட குழப்பமாக இருக்கிறது. கடவுளிடம் நேரெதிரான வரங்கள் ஒரே நேரத்தில் வரும் போது யாருக்கு சாதகமான நிலைப்பாடு எடுப்பார்? எந்தப் பிரார்த்தனைக்குச் செவி மடுப்பார்? ஒரு கெட்டவன் தான் நன்றாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுக்கா? அல்லது, அவனால் பாதிக்கப்பட்ட நல்லவன் அக்கெட்டவன் நாசமாய்ப் போக வேண்டும் என்று கேட்பதற்கா?

                                                            6

உலக அளவில் பரப்பப்பட்ட ஒரு பெரிய மோசடி – ‘தியானம்’. தியானிக்கக் கற்றுத் தருபவர்கள் இப்படித்தானே தொடங்குவார்கள்? – மனதை ஒருமுகப்படுத்தி, உள்ளத்தை அலைபாயவிடாமல் (ரெண்டும் ஒண்ணுதான?), மூச்சை நன்கு ஆழமாக உள் இழுத்து, எதையும் பற்றி யோசிக்காமல் ….. அது எப்படி ஒரு மனிதனால் ஒன்றுமே யோசிக்காமல் இருக்க முடியும்? சில சமயங்களில் எவ்விதச் சிந்தனையும் இன்றி இருத்தல் எல்லோருக்குக்கும் நிகழும். அவ்வாறான அபூர்வ தருணங்கள் இயல்பாக வாய்க்கப்பெறும். வலிந்து மனதை ‘யோசிக்காதே!’ எனக் கட்டளை இட்டு வெல்ல முடியுமா என்ன? அவ்வாறு வென்றுதான் என்ன ஆகப் போகிறது?

மருத்துவ ரீதியாகப் பார்த்தால் கூட இந்த தியானம், மோன நிலை என்பதெல்லாம் மேலும் மனஅழுத்தத்தைக் கூட்டுவதாகவும் மாயத்தோற்றங்களை(hallucinations) உண்டாக்குவதாகவும் ஆய்வில் கூறுகின்றனர். எவ்வித எண்ணமும் துளிர்விடாமல் மனதைத் துடைத்துக் காலியாக வைத்திருக்கப் பழக்குதல் பித்து நிலைக்கு இட்டுச் செல்லாதா? நான் கூறுவது கொஞ்சம் அதிகப்படியாக இருக்கலாம். ஆனால் இது self induced lobotomy ஆகாதா?

 அவ்வாறாக மனதை ஒருமுகப்படுத்த முயன்று கொண்டிருந்த பொழுதுகளில் எல்லாம் நினைவுகள் கண்டமேனிக்கு வந்து மனதை ஆக்கிரமிக்கும். அவ்வாறான ஓரிரு முயற்சிகளின் போது……

ஐந்தாம் வகுப்பில் அறிவியல் நோட்டில் ஏற்கெனவே எழுதிய பக்கங்களைக் கிழித்துத் தந்து மீண்டும் எழுதச் சொல்லியவாறே அடி ஸ்கேலை என் குட்டி மொளியின்(knuckles) குறுக்காக வைத்து அதிவேகமாகத் தடவிக் கொடுத்த சாந்தி மிஸ்;

முதன்முதலாக வேப்பங்கொட்டையின் சுவையை அறிந்து கொள்ளும் ஆவலில் தாத்தாவிடம் அதைப் பற்றிக் கேட்டது; ‘சாப்பிட்டுப் பாரு’ என தாத்தா சொன்னதை நம்பிக் கடித்த மறு நொடியில் சற்று முன் உண்ட மதிய உணவை மொத்தமாக வாந்தி எடுத்து அழுதுகொண்டே ஆச்சியிடம் ஓடியது; நடந்தவற்றைக் கேட்ட ஆச்சி தாத்தாவைக் கடிந்து கொண்டது;

“நம்மளால ஒரு நிமிஷம் கூட தியானம் பண்ண முடியல. அந்த மனுஷன் எப்படி இந்த எடத்துல மூணு நாள் தியானம் பண்ணாரு” என்று விவேகானந்தா பாறையின் தியான அறையில் அமர்ந்தவாறே வியந்தது;

350 வருடங்களாகத் தீர்வு காண முடியாத open problem ஒன்றுக்கு 18வது வயதிலேயே தீர்வைத் தந்துவிட்டு அநியாயமாக தனது 20வது வயதில் duelல் போய் உயிரை விட்ட Galoisயை நினைத்துப் பரிதாபப்படுவது ….

எனச் சம்பந்தமே இல்லாமல் பலவும் வரிசை கட்டி நினைவிற்கு வரும்.

மனமே அகழ்வாராய்ச்சிக்குக் குத்தகைக்கு விடப்பட்டதைப் போல் எனக்கு முற்றிலும் மறந்து போய்விட்டதாக நான் நினைத்துக் கொண்டிருந்த பல நெளிய வைத்த தருணங்களும் அப்போதுதாம் மிகச் சரியாக மேலெழுந்து வந்து குறுக்க மறுக்க ஓடிக் கொண்டிருக்கும். எதையும் யோசிக்காமல் இருக்க நானும் எவ்வளவோ முயன்றிருக்கிறேன். ஆனால் ஒரு நல்ல ஆழ்நிலை உறக்கத்தின் மூலம் மட்டுமே இது எனக்குச் சாத்தியப்படுகிறது. இதையும் கூட பள்ளியின் யோகா வகுப்புகளில் அவர்கள் செய்யச் சொன்ன சாவாசனம்தான் எனக்கு உணர்த்தியது. 

            Yoga – The best excuse for doing almost nothing and calling it something என்று வேடிக்கையாக வாசித்த ஞாபகம்.

                                                                        7

            இந்த….. ‘பாட்டு கேட்டுட்டே…..’ வகையறாக்களிடம் வெகு நாட்களாக ஒரு சந்தேகம் கேட்க வேண்டியிருக்கிறது. பாட்டு கேட்டுக் கொண்டே உடற்பயிற்சி செய்யலாம். சமைத்தல், வண்டி ஓட்டுதல் கூட கொஞ்சம் கொஞ்சம் பரவாயில்லை. பாட்டு கேட்டுக் கொண்டே புத்தகம் வாசிப்பது, அலுவலக வேலை/வீட்டுப்பாடம்/assignment செய்வது…. பொய்தானே சொல்கிறார்கள்? டீக்கடை அல்லது முனிசிபாலிட்டி டிவி மாதிரி 24 மணி நேரமும் ஏதோ சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற வியாதியாக இருக்குமோ? ஒரு நல்ல பாட்டை ரசித்துக் கொண்டே எவ்வாறு அதீத கவனம் தேவைப்படும் இன்னொரு வேலையையும் செய்ய முடியும்?

                                                                        8

            சமூக வலைதளங்களில் செய்திகள் மேய்வதை மேற்கூறியதன் மென்மையான விரிவாக்கம் எனக் கொள்ளலாமா? ஒரு கொடூரமான கொலை/வன்புணர்வு பற்றிய செய்தி, ஒரு நடிகனின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு, புற்றுநோய்க்குக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து, அதிக ரிக்டரில் உண்டான நிலநடுக்கம், தடகளத்தில் வென்ற வீராங்கனை, அணு உலை விபத்து, நடிகையின் நாய் போட்ட குட்டிக்குப் பெயர் சூட்டு விழா,….. இப்படியாக வெற்றிலையைத் தடவுவது போல் நகர்த்திக் கொண்டே இருந்தால் பதற வேண்டிய செய்திகளையும் மனது சாதாரணமாகக் கடந்து சென்றுவிடும் அல்லவா? மிதமிஞ்சிப் போனால் ஒருவரது அல்லது பலரது கொடும் வலிக்கு ஒரு ‘உச்’ கொட்டிவிட்டு அடுத்த செய்திக்கு clean slateஆக மனது தயாராகிவிடும். ஒரு செய்தியை வாசிப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் அந்த ஒரு சில நொடிகளுக்குப் பிறகு மின்னல் வேகத்தில் அதன் தாக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட முடிவது ஆரோக்கியமானதா? நானும் கூட எல்லோரையும் போல்தான் அலைபேசியில் செய்தி பார்க்கிறேன். என் மனதைப் பார்த்தால் எனக்கே கொஞ்சம் பயமாக இருக்கிறது.

அப்பப்போ ஐ திங்க் பண்ணதுல இப்போதைக்கு இவ்வளவுதான் ஞாபகம் வந்துச்சு. மிச்சத்தை அப்பாலிக்கா சொல்றேன். டாட்டா!

  • சோம. அழகு

Series Navigationகவிதை