—வளவ. துரையன்
சென்னை வாழ்க்கை இன்னும் பிடிபடவே இல்லை. வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. காலத்துக்கென்ன? அது ஓடிக்கொண்டே இருக்கும். நமக்குதான் பொழுதே போகவில்லை. கடலூர் என்றால் காலையில் யாராவது வந்து பேசிக்கொண்டிருப்பர். மாலையில் பெரும்பாலும் ஏதேனும் நான் பேச வேண்டிய அல்லது கேட்க வேண்டிய கூட்டங்கள் இருக்கும். இப்பொழுது ஞாயிறை விட்டுவிட்டு வேலை நாள்களில் கூடக் கூட்டங்கள் நடத்துகிறார்கள். ஏனென்று கேட்டால் ஞாயிறுதான் எல்லாருக்கும் ஓய்வு நாள் அன்றுதான் திரைப்படம், கடை வீதிகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என விடை வருகிறது.
பால்கனியில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கும்போது பறந்து வந்த இரு புறாக்கள் கவனத்தைக் கலைத்தன. குறுகுறுவென்று சிறு குரலெழுப்பி ஒன்று மற்றொன்றைச் சுற்ற அதுவோ நகர்ந்து நகர்ந்து போய்க்கொண்டிருந்தது. சிறிது நேரமாயிற்று. அந்த விளையாட்டு அவற்றுக்கு அலுப்புத் தட்ட இரண்டும் பறந்து சென்றன. இக்குடியிருப்பில் புறாக்கள் அதிகம். கட்டடம் கட்டும்போதே நமக்கு முன் அவை குடியேறிவிடுகின்றன போலும்.
சிறுவர்கள் தத்தம் மிதிவண்டியில் அடுக்ககத்தைச் சுற்றி வரத் தொடங்கினர். கொக்குகளும் காக்கைகளும் கூடு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. இங்கும் இன்னும் சற்று நேரத்தில் காலையில் இங்கிருந்து அலுவலகம் நோக்கிச் சென்றவர்கள் வரத்தொடங்கி விடுவர். லேசாகக் காற்று வீசிக்கொண்டிருந்தது. மழை வரும்போல இருந்தது. திடீரென இருட்டவும் தொடங்கியது. ஓரிரு தூறல்கள் விழத் தொடங்கின.
”அப்பா, உள்ள வந்து ஒக்காருங்க” என்றாள் மருமகள்.
”இல்லம்மா. இங்கத் தண்ணி விழல” என்றேன் நான்.
அதற்குள் மணி எட்டாகிவிட்டது. மகன் அலுவலகம் விட்டு வரும் நேரம் நெருங்கத் தொடங்கியது. பேரனும் பேத்தியும் அறைக்கதவுகளை மூடிக்கொண்டு கணினியிலோ கைப்பேசியிலோ மூழ்கிவிட்டார்கள். மனைவியும் பக்திக் காட்சிகள் முடிந்து விட்டதால் தொலைக்காட்சியை மூடிவிட்டு உள்ளே போய் படுத்து விட்டாள். அனைவருக்கும் ஏதோ ஒரு வேலை இருப்பது போலவும் எனக்குத்தான் ஒன்றுமே இல்லை என்றும் ஆகிவிட்டது போல ஓர் உணர்வு எனக்கு ஏற்பட்டது.
கடலூரில் காலையில் குடிநீர் பிடித்து வைத்தல்; ஐம்பது மீட்டர் தொலைவில் இருக்கும் கடைக்குச் சென்று பால் வாங்கி வருதல். அதன் பின்னர் ஒரு கிலோமீட்டர் தொலைவு சென்று காய்கறிகள் வாங்கி வருவது போன்ற வேலைகள் இருநதன. இங்குக் காலையில் காப்பி குடித்ததும் அடுக்ககத்தை ஐந்து சுற்றுகள் சுற்றி வந்தாலே நாற்பது மணித்துளிகள் ஓடிவிடும்.
பிறகு குளியல்; அதன்பின் கேழ்வரகுக் கஞ்சி குடித்தல், தினமணி அல்லது சிற்றிதழ்கள் வாசிப்பு அதற்குள் மதிய உணவு நேரம் வந்துவிடும்; இந்த மதிய உறக்கம் கொள்பவர்களைப் பார்த்தாலே எனக்குப் பொறாமைதான். அப்பழக்கமே இல்லாதவன் நான். அப்பொழுதும் ஏதோ வாசிப்புதான்.
ஆனால் கிரிக்கெட் ஆட்டங்கள் நடக்கும் நாள்களில் நேரம் ஓடும். ஓடும். அவ்வளவு விரைவாக ஓடிவிடும். இப்படி ஏதேதோ நினைத்துக் கொண்டு கொஞ்சம் மழைபெய்து மீதியை ஒளித்துக் கொண்டுவிட்ட வானத்தைப் பார்த்தேன். மின்னல்தான் மின்னிக்கொண்டிருந்தது. அழைப்பு மணி ஒலித்தது.
மருமகள் போய்த் திறக்க மகன் வந்தான். “என்னாப்பா, நனைஞ்சிண்டா வந்த?” என்றேன் நான்.
“இல்லப்பா, மழைக்கோட்டு எடுத்துக்கிட்டு போயிருந்தேன்; அவ்வளவு மழையும் இல்ல”
”சரி, எதுக்கும் தலையைத் துவட்டு”
வழக்கம்போல அவன் குளித்து விட்டு வந்து உட்கார்ந்தான். ”ஏம்பா இங்க சாரல்ல வந்து ஒக்காந்து இருக்கீங்க?”
“இல்லப்பா, இங்க நனையற மாதிரி தூறல் இல்ல. காத்து குளுமையா வந்திச்சு; அதான்”
”அவருக்குப் பொழுதே போகமாட்டேங்குது” என்று சொல்லிக் கொண்டே மருமகள் அவனுக்குக் காப்பி கொண்டு வந்தாள். அதை வாங்கி ஆற்றினான். மீண்டும் அந்தப்புறாக்கள் வந்து விளையாடின. அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தவரின் கவனத்தை அவன் பேச்சு கலைத்தது.
”மாலைல கீழ போயிப் பாருங்கப்பபா; ஏழெட்டுப் பேரு உள்ள வர்ற வழிக்குப் பக்கத்துல ஒக்காந்து பேசிக்கிட்டிருப்பாங்க; நீங்களும் போயிக் கலந்துக்கலாம். நல்லா பொழுது போயிடும்” எனச் சொல்லிக் கொண்டே காப்பியைக் குடித்தான். அதற்குள் பேரனும் பேத்தியும் உள்ளிருந்து வெளியே வந்தனர்.
“ஆமாம் தாத்தா; தெனமும் ஒக்காந்து பேசிக்கிட்டே இருப்பாங்க. நானும் பாத்திருக்கேன்” என்றாள் பேத்தி.
“எல்லாருமே ஒன்னை மாதிரி வயசானவங்கதான்” என்றான் பேரன்.
“சரிப்பா; நாளைக்குப் போயிப் பாக்கறேன்” என்றேன்.
“ரெண்டு நாளு போயிப் பாருங்க மாமா: புடிக்காட்டா வாணாம்” என்றாள் மருமகள்.
மறுநாள் மாலை ஆறு மணி இருக்கும். கீழே போய்ப் பார்க்கலாம் என்று நினைத்தேன். முதல் மாடியில் இருப்பதால் படிக்கட்டுகளின் வழியாகவே இறங்கி வந்தேன். வானம் அழகாக இருந்தது. ஆங்காங்கே திட்டுத் திட்டாய் வெண்மேகங்கள். அடுக்ககத்தைச் சுற்றிலும் நடைபயிற்சி நடந்து கொண்டிருந்தது. உள்ளே வரும் வழியை நோக்கிச் சென்றேன். அருகில் சென்று பார்க்கும்போது ஆறு பேர் அமர்ந்திருப்பது தெரிந்தது. எல்லாருக்கும் நாற்காலிகள் இருந்ததோடு இன்னமும் நான்கைந்து இருக்கைகள் காலியாகவும் இருந்தன.
என்னைப் பார்த்ததும் ஒருவர் அழைத்தார். “வாங்கய்யா. வாங்க ஒக்காருங்க” என்று ஒரு நாற்காலியைக் காட்ட நான் போய் உட்கார்ந்தேன்.
மற்றொருவர் கேட்டார், “நூத்தி எட்டுல இருக்கறது ஒங்கப் புள்ளயா?”
“ஆமாங்க, ரெண்டாவது மவன் இவன். பெரிய மகன் படூர்கிட்ட இருக்கான்; நான் ஆசிரியரா இருந்தவன். இப்பதான் தனியா இருக்க வாணாம்னு இங்க வந்திட்டேன்.”
“என்னா பொழுதே போலயா” என்றார் ஒருவர்.
“ஆமாங்க, கடலூரு நான் முப்பது வருஷத்துக்கு மேல இருந்த ஊரு; அங்க வெளியில போயிடுவேன். இல்லாட்டாலும் யாராவது வந்து பேசிக்கிட்டே இருப்பாங்க”
”இனிமே இங்க வந்திடுங்கய்யா; நாங்க ஏழெட்டு பேரு தெனம் வந்திடுவோம். சில நாளு பத்துப் பேரு கூட ஆயிடும். நாற்காலியெல்லாம் நாங்கதான் வாங்கிப் போட்டிருக்கோம்” என்றார் என்னை முதலில் அழைத்தவர்.
“எல்லாருமே தனியாரு இல்லன்னா அரசுப் பணியில் இருந்தவங்கதான். அஞ்சரை மணிக்கெல்லாம் வந்திடுவோம். கிட்டத்தட்ட எட்டு மணி வரை இருப்போம்’ என்றார் ஒருவர்.
மூன்று சிறுவர்கள் மிதிவண்டியை விட்டு இறங்கி வந்து பார்த்தனர். “இன்னும் வரலடா” என்றான் அவர்களில் ஒருவன். பின்னர் அவர்கள் அடுத்த சுற்றுக்குக் கிளம்பிவிட்டனர்.
“வந்துடுவாருடா; நீங்க போயிட்டு வந்து பாருங்க” என்றார் ஒருவர்.
“யாரைத் தேடறாங்க” என்று கேட்டேன்.
“இங்க ஒரு பெரியவரு வருவாரு; பாருங்களேன்” என்று அவர் சொல்லும்போதே ஒருவர் வந்துவிட்டார். வந்தவர் ஒரு நாற்காலியில் அமர்ந்தார். ஒரு டீ ஷர்ட்டும் முக்கால் பேண்ட்டும் போட்டுக்கொண்டிருந்தார் வந்தவர். கையில் ஒரு பை இருந்தது. நெற்றியில் விபூதியும் நடுவில் குங்குமமும் இருந்தன.
“அதுக்குள்ள புள்ளங்க ஒங்கள வந்து தேடிட்டுப் போயிட்டாங்க “ என்றர் ஒருவர்.
“ஆமா, இன்னிக்குக் கொஞ்சம் நேரமாயிட்டுது” என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே முன்பு வந்த சிறுவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு வந்தனர். அவர்கள் வந்ததும் கடைசியாக வந்தவர் தன் பையில் கை விட்டார். பையிலிருந்து மிட்டாய்கள், சாக்லேட்டுகள் எடுத்தார். மூவரும் கை நீட்ட ஆளுக்கொன்று தந்தார். மிட்டாய் வாங்கியவன், “ தாத்தா இது வேணாம். எனக்கு சாக்லேட்டு” என்றான். அவனுக்கு சாக்லேட் தந்தனுப்பினார். அவர்கள் சென்றதும் இதே போல நிறைய சிறுவர்கள் சிறுமிகள் வந்து வாங்கிக் கொண்டு விளையாடச் சென்றனர்.
பிறகு பேச்சு தொடங்கியது. அரசியல், திரைப்படம், வானிலை, இன்றைய சிறுவர்களின் விளையாட்டு, அடுக்ககத்தின் குறைகள் என்று எல்லாவற்றையும் பேசினர். நேரம் போனதே தெரியவில்லை. ஒவ்வொருவராகக் கலையத் தொடங்கினர். நானும் இன்னொருவரும் மட்டும் இருந்தோம்.
நான் அவரிடம் கேட்டேன். “யாருங்க இவரு? தெனம் இதே மாதிரி குடுப்பாரா?
“ஆமாங்க; புள்ளங்க எல்லாம் அவரை எதிர்பார்த்துக் கிட்டே இருக்குங்க”
“எங்க இருக்காரு?
”நானூத்தி நாலுலே இருக்காரு. அவரும் அவர் மனைவி மட்டும்தான்”
“ஏன் அவர் பசங்க எங்கே”?
”ஒரு புள்ள, ஒரு பொண்ணு; ரெண்டுபேர்ல ஒருத்தரு அமெரிக்காவுல. பொண்னு துபாயில”
“இங்க வருவாங்க இல்ல”
“அதாங்க இவருக்குப் பெரிய கொறை; கொழந்தைங்கன்னா இவருக்கு ரொம்பப் பிடிக்கும். இவருக்கு அம்பத்தூர்ல நாலைஞ்சு கடை இருக்கு. ஒண்ணு மெடிக்கல், இத மாதிரி மளிகைக் கடை, ஹார்டுவேர்னு. அதுங்கள விட்டுட்டுப் போக முடியல; அடிக்கடி வெளிநாட்லேந்து வந்துக்கிட்டு இருந்தவங்க இப்ப அஞ்சு வருஷமா வர்றது இல்ல: பேரக் கொழந்தங்களைப் பாக்க முடியலியேன்னு சொல்வாரு. ஆறுதலுக்குப் புள்ளங்களுக்கு இதமாதிரி மிட்டாய் வாங்கிக்குடுக்கறாரு. பேரே அவருக்கு மிட்டாய் தாத்தானு பசங்க வச்சுட்டாங்க”
வீட்டில் என் மனைவியிடம் இதைச் சொன்னபோது அவள், பாவங்க அவரு; அவர் மனசில எவ்வளவு ஆசை இருக்கும் ? என்றாள்.
“அத விடு. மிட்டாய் வாங்கிட்டுப் போற புள்ளங்க எவ்ளோ மகிழ்ச்சியா போறாங்க தெரியுமா? என்றேன் நான்.
நானும் கீழே பேசும் சபையில் ஓர் அங்கத்தினன் ஆகிவிட்டேன். மிட்டாய் தாத்தா சில நாள்கள் எங்களைப் போன்ற பெரியவர்களுக்கும் போண்டா, பஜ்ஜி, வடை எல்லாம் வாங்கிக் கொடுத்தார். அடுத்து ஒரு பத்துப் பதினைந்து நாள்கள் எனக்கு வெளியூர்ப் பயணம். மனைவியுடன் கும்பகோணம், தஞ்சாவூர் திருச்சி என்று அலைச்சல். எல்லாம் நெருங்கிய சொந்தங்களின் திருமணங்கள். திரும்பி வந்து மாலை சபையில் உட்கார்ந்து எல்லாரையும் பார்த்தபோது மனத்திற்கு ஒரு நிம்மதி வந்தது போலிருந்தது.
அன்று சீக்கிரமே வந்துவிட்டேன். ஒருவர் மட்டுமே இருந்தார். அவர் “என்னங்க ஆளயே காணோம்?” என்று கேட்டார்.
“ஆமாங்க நாலஞ்சு திருமணம். எல்லாத்துக்கும் போகவேண்டி இருந்தது” என்றேன் நான்.
மிதிவண்டியில் சிறுவர்கள் சுற்றி வந்தனர். எங்களைப் பார்த்துக் கொண்டே சென்றனர். “பிள்ளங்க பாத்துக் கிட்டே போறாங்க; இன்னும் அவரு வரலியா” என்று கேட்டேன்.
“யாரைக் கேக்கறிங்க”
“அதாங்க மிட்டாய் தாத்தா” எனச் சிரித்துக் கொண்டே கூறினேன்.
அவர் முகம் மாறிவிட்டது. “இல்லிங்க; அவரு வரமாட்டாரு” என்றார் சோகமுடன்.
“ஏங்க ஊர்ல இல்லியா?”
“இல்லிங்க; நீங்கதான் ஒரு வாரமா இல்லியே அதான் தெரியல. அவரு காலமாயிட்டாரு”
நான் பதறிவிட்டேன். “எப்படீங்க? எப்ப?”
”போன பொதன்கெழமைதான். திடீர்னு மாரடைப்பு. டாக்டர் வர்றதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு. புள்ளயும் பொண்ணும் வந்தாங்க; காரியம் முடிஞ்சு வீட்ல இருந்த சாமான் எல்லாத்தையும் வித்துட்டுப் போயிட்டாங்க; வீட்டையும் விக்கப்போறாங்கலாம்” என்றார் மெதுவான குரலில்.
கீழேயே சற்று நேரம் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தேன். மிதிவண்டிகளின் மணிகள் ஒலிக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தேன். ஏழெட்டு சிறுவர் சிறுமிகள் எங்களைப் பார்த்தவாறே மிதிவண்டியில் சுற்றச் சென்றனர். அவர்களின் பார்வை ஏதோ சொல்வது போலிருந்தது.
மறு நாள் மாலையில் நான் சபையில் உட்காரும்போது என் கையிலிருந்த பையில் மிட்டாய்கள் இருந்தன.