This entry is part 7 of 9 in the series 30 ஆகஸ்ட் 2026

ஏங்கி விம்மும் ஏக்க ஒலி

வெளிச்சத்தில் தெரிகிறது

தெரியக் கூடாது

தெரிய வேண்டாம்

இப்போது இருள் வேண்டும்

கொஞ்சம் கருத்த ஒளி வேண்டும்

மறைந்து கிடக்கும்

காய்ந்த குச்சியின்

பிசுபிசுப்பு ஈரம்

இருளிலேயே உலர்ந்ததாகச் சொல்கிறார்கள்

இல்லை இல்லை

கொஞ்சம் வெளிச்சமும் பட்டிருக்கும்

வெளிச்சத்தின் பாய்ச்சல் 

இருளில் தள்ளியிருக்க வேண்டும்

மீண்டும் அதே வார்த்தை 

இப்போதெல்லாம்

ஈரத்தை உறிஞ்சாமல் 

குச்சி மிதக்கிறது

படகாக அல்ல

குழி நைந்த தக்கையின் வாட்டத்தில் 

மிதக்கும் குச்சி

கண் மூடி அசைகிறது

அப்படியே பறக்கிறது

கொஞ்சம் கொஞ்சமாக

தள்ளித் தாவி குதிக்கிறது

எல்லாமே இருளுக்குள்..

*******

சுற்றிச் சுற்றி நெளிந்து விழும்

தலைகீழ் கடல் அலையாக

பறந்து பறந்துகொண்டிருக்கும்

குண்டலகேசத்தை

கண் கொண்டு பார்க்கும்போதெல்லாம்

மனதில் விரிந்த உருவம்

வாய் முழுக்கச் சிரிப்புடன்

நினைவேந்தி நிற்கிறது 

பரபரப்புக்கு குறைவற்ற சாலையில்

முன்னும் பின்னும் மாறி மாறி பறக்கும் 

மண்தூசியில் கலந்த பிரியம்

சுருளுக்குள் சிக்கிக் களிப்பதைப்

பொறுக்க முடியாது 

நாள்தோறும் முடி கழுவுகிறாய்

*****

கொத்துக் கொத்தாக

பின்னப்பட்ட சடையாக

சுருண்டு பிணைந்து இறுகிட்ட 

நீரோடையோரத்து பிளந்த மரத்தின் 

விழுதாக மயிர் விழுகிறது

பறக்கிறது

முதுகில் ஒட்டிக் கிடக்கிறது.

பிடரிக்குக் கீழ் சுருள்வதோடு நில்லாமல்

சுருண்டுத் தொங்கி மடங்காமல்

காதருகே கட்டைக் கட்டையாக 

வெளியே தெரிகிறது.

சிலநேரம் கன்ன வியர்வையில் ஒட்டி

கழுத்துவரை நீள்கிறது.

முன்வாசலில்

வாழைமரத் தோரணையின்

வரவேற்பாகச் சுருண்டு

கண்களுக்குள் சென்று பேச

அழைக்கிறது.

பின்வாசலில்

பலவண்ணப் புள்ளிகளாலான

பச்சைநிற பட்டாம்பூச்சி

வந்தமர்ந்து முகர்ந்து

அடர்ந்துகிடக்கும் பின்னலைக்

கட்டிப்பிடித்துத் தூக்க

இறுகி இறுகி இளிக்கிறது.

தலையாட்டும் போதெல்லாம்

பட்டாம்பூச்சி பின்னலைத் தூக்கி

பறந்து தேனைக் கண்ணுக்குள்

கொட்டி இனிக்கிறது.

எத்தனை இனித்தாலும் 

சாதாரண மயிர், மயிர்ப் பின்னல், தொங்கலென

வகை வகையாக விரிக்கப்பட்ட

அள்ளி முடிக்கப்பட்ட

அந்தக் கூந்தலுக்கு

என்ன வாசனையோ

வண்ணத்துப்பூச்சி வந்தமரும் வரை

*******

காற்றில் பறந்து கொண்டிருக்கும் 

மரங்களின்  ரேகைகளை சுமந்தபடி 

வானில் மிதக்கும் மீன்கள் 

தலையில் அணிந்துள்ள தொப்பியை மோதுகின்றன 

ரேகைகள் தொப்பியைத் தொடுகையில்

மூளைக்குள் பாயும் வேர்களை 

நாரை கொத்தி உதிர்க்கிறது. 

உதிரும் ஒரு இலை நாரையின் அலகை

இறுகிப் பிடித்து நெருக்க 

ஒற்றைக் காலில் நடனமாடி 

துடுப்பாட்டம் ஆட 

தானாகத் தலை அசைகிறது.

அசையும் தலையின் நரம்புகள் 

சுருக்குப் பையை இறுக்குவதாக

தூக்கின் முனையைத் தொட்டு

கீழே விழுவதைக் கண்ட

வயோதிகனின் துப்பாக்கிக் குண்டு 

இலையைத் துளைத்து

ரேகையின் பாதையை அறுக்கிறது.

அறுபட்ட பாதையில் திசை மாறும் மீன்கள் 

சென்றடைந்த தீவில் 

சிறகடித்து பறந்து 

மீன்களைக் கவ்வத் துடிக்கின்றன. 

*******

இடக்கூடிய சண்டைகள்

முட்டைகளென பொரிந்து

குஞ்சுகளைப் பிரசவிக்கின்றன

இரட்டைக்கால்கள் மேல் உடலைச் சுமந்து 

அங்குமிங்கும் ஓடித்திரியும் குஞ்சுகள் 

தன்னுடனே காரணங்களை 

அழைத்துச் செல்கின்றன

மண்ணுக்குள்ளிருந்து புதைந்து நெளியும்

புழுக்களின் விட்டைகளிலிருந்து உணவெடுத்து

புழுக்களைக் கொத்தி 

வயிற்று முழுக்க வன்மத்தை நிரப்பி 

வண்ணச்சாயத்தில் முக்கியெடுக்கப்படும்போது

ஒவ்வொரு துளியும் உள்ளிறங்கி

கவர்ச்சிகர பெருக்கமாக அன்பால் மூடப்பட்டு

ஒப்பனையுடன் சிறுவர்களது கைகளில்

நடித்து நடனமிடும் பொழுதில்

காக்கை பறந்து வராது

ஓரம் நின்று வேடிக்கை பார்க்கிறது 

மழை விரைந்து வராது 

மேகத்துடன் சிரித்து குலாவுகிறது

அட்டைப்பெட்டிக்குள் உடல்தேய்த்து

வண்ணம் பூசிய மூன்றாம் நாளில்

வயிறு ஊதி செத்துக் கிடக்கும் 

குஞ்சின் வயிற்றைக் கொத்தி

கண்ணுக்குள் வன்மம் ஏற்றி பறக்கும் காக்கை

சாவகாசமாக நின்று எச்சமிடுகிறது

ஒவ்வொரு சிலைகளிலும்

*****

கையொடிந்த மரக்குருவியொன்று

நேற்று மதியம் குத்திட்டு விழுந்த மழையில் நனைந்து

பக்கம் வந்து குதித்தது

கா கா பெய்ட் மால் என 

திக்கி திக்கி குரைக்கும் பலனிழந்து குரைத்தது

மருந்து போட வேண்டுமாம்

கையெடுத்து கும்பிட முடியவில்லையாம்

காயத்தைக் காட்டியது

செவனேன்னு படுத்தால் மேலேறி குதிக்கிறது

மருத்துவரென நினைத்து வந்தாயா என்றதற்கு

கழுத்து ஒடியுமளவு தலையாட்ட

எனக்குத் தெரியாதென சொல்லவும்

கண்ணுக்குத் தெரியாத கையை 

ஆட்டிக்கொண்டே பறக்கிறது

போவதைப் பார்த்தால் இன்னொருநாள் 

திரும்பி வரலாம் போலும்

*****

பற்றும் தீயை அணைக்கச் செல்லும் அவசரத்தில்

கயிறு கட்டி வித்தை தெரியாமல் தொங்குகிறேன்

திரிக்கப்படும் கயிற்று நுனியின்

பிணையல் முறுக்கு மேலேற்றி விடுகிறது 

கப கபவென எரியும் எதை முதலில் அனுப்புவது

மேலே ஏறும்போது பையில் போட்டு வைத்திருந்த

சில்லறைக்காசு கீழே விழுந்துவிட்டது

கடலை மிட்டாய் வாங்க வைத்திருந்த காசு அது.

எப்படி முடிவெடுப்பது? 

எதை அணைப்பது?

அணைத்து நெருங்கி வரும் நெருப்பினுள் 

தலையை விட்டு கால் கை உதற

வெட்டித் துடிக்கிறது முண்டம்

இரவுநேர தனிமையில் 

மதுவின் துணையில் எழுதப்பட்ட 

டயரிப்பக்கங்கள் எரிகிறது 

ஆய்வுக்கென சேகரித்துவைத்த தரவுகளோடு 

அகராதியில் உள்ள அர்த்தங்களும் பொசுங்கிப் புகையாகின்றன

காதலுக்கென எழுதப்பட்ட கவிதைகள் 

எரியும் பறவையாக அறையைச் சுற்றுகிறது

மூலையோரத்தில் பிரிவின் கவிதைகள் சாம்பல் கக்குகிறது

பீனிக்ஸ் பறவையாக மேலெழும்பும் 

தன்னம்பிக்கை வாசகங்கள் அடங்கிய நோட்டுப்புத்தகம் பக்கம் 

கண்கள் செல்கிறது 

தீட்சை தரும் அப்படியான பக்கங்கள் எங்கும் இல்லை

ஸ்வீட் கடை வாசலிலிருந்து நாகராஜன் சொன்ன சொற்களும்

மணப்பாடு மணலை மிதித்து 

கிருபா சொன்ன மொழிகளும் 

எழுதப்பட்டிருந்த குறிப்பேட்டின் அட்டை 

புகை கக்கி ரயில் ஒட்டுவதை 

ஓரம் நின்று பார்க்க மட்டுமே முடிகிறது 

தீயை அணைக்க மனமில்லை

அழிவை இரசிக்கிறேன் என மேலேறி வரும்

புதிய தீயணைப்பு வீரன் 

புத்தி பேதலித்து 

எரியும் பாதுகைகளை கழற்றாமல்

வேடிக்கைப் பார்க்கும் புதிய பைத்தியமென

அவன் என்னை எல்லாரிடமும் அறிமுகப்படுத்தலாம்

*******

தொடர்புக்கு: alaguraj437@gmail.com

                              8807339644       

Series Navigationமேகமலை — ஒரு மலையின் குரல்கவிதை