This entry is part 2 of 9 in the series 30 ஆகஸ்ட் 2026

“உங்க அம்மா மாதிரியெல்லாம் என்னால இருக்க முடியாது. நீங்க எப்படி எதிர்பார்க்கலாம் நானும் அவங்களை மாதிரி இருக்கணும்னு? ஏங்க, எந்தக் காலத்துல இருக்கீங்க?

உங்க அம்மா வாங்குன சம்பளப் பணத்தை எல்லாத்தையும் உங்க அப்பாகிட்ட கொடுத்த மாதிரி, நானும் கொடுக்கணும்னு சொல்றீங்களா? ஏங்க, அவங்க அறுபதுகளைச் சேர்ந்தவங்க; நாங்க 2K கிட்ஸ், இப்படித்தான் இருப்போம். எங்க மனசாட்சி என்ன சொல்லுதோ, அதைத்தான் நாங்க செய்வோம். இடையில யாரு வந்தாலும் கவலை இல்ல எங்களுக்கு!” என்றாள் கவிதா.

“கத்தாதடி, அம்மா காதுல விழப்போகுது; ஏதாச்சும் நினைச்சுக்கப்போறாங்க” என்றான் சுந்தர்.

“அதெல்லாம் அவங்க காதுக்குக் கேட்காது; இந்த நாலு சுவத்துக்குள்ள பேசறது எப்படி அவங்க காதுக்குப் போகும்? நாமே அவங்ககிட்ட போயி சொல்லாம இருந்தாலே போதும்.

நீங்களே சொல்லுங்க, எல்லா விஷயத்துலயும் ‘அம்மாப் போல இரு, அம்மாப் போல இரு’ன்னா எப்படி? இந்தக் காலத்துக்கேற்ற நடை, உடை, பாவனையெல்லாம் மாத்திக்க வேண்டியதா இருக்கு. உங்க அம்மா பெரிய வட்டப் பொட்டு வைப்பாங்க, தலைக்குக் கொண்டையைப் போடுவாங்க, மூக்குல சின்னதா சிவப்பு கல்லு வச்ச மூக்குத்தி, ரெண்டு காதுக்கும் கலர்கலரா கல்லு வச்ச தோடுன்னு போடுவாங்க.

குறிப்பா, அவங்க கட்டுற புடவை இருக்கே, எவ்வளவு வெயிட்டு தெரியுமா? இதுல வேற, அதைத் துவைக்கவே மாட்டாங்க. எப்போதும் கட்டின பிறகும் டிரை கிளீனிங்குக்குப் போடுவாங்க. அந்த மாதிரி புடவையெல்லாம் நான் கட்டினேன்னா என்னால நடக்கவே முடியாது. ஒண்ணு, நடக்கும்போது கீழே விழுந்திடுவேன்; இல்ல நடக்க முடியாம பேசாம ஒரு இடத்துல உட்கார்ந்துருவேன்.

இப்ப என்கிட்ட இருக்கிற புடவையெல்லாம் பாருங்க, எவ்வளவு வெயிட்லெஸ்ஸா இருக்கு! உடம்புல கட்டினாப் போலவே தெரியல. இதைப் பிடிக்குமா, இல்ல உங்க அம்மா கட்டுறாங்களே அந்தப் புடவை பிடிக்குமா? நீங்களே சொல்லுங்க.

இதையெல்லாம் நானும் போட்டுக்கிட்டுப் போனா, பாக்கிறவங்க எல்லாரும் என்னைப் பார்த்துச் சிரிக்கிறது மட்டுமில்லாம, ‘இவ என்ன சுத்த கர்நாடகமா இருக்காளே! இந்தக் காலத்துலப் போயி இப்படி மேக்கப் போட்டுட்டு வர்றாளே!’ என்பார்கள். இது ஒருபுறம் இருக்க, ‘புருஷன் சொன்னா கேட்கணும்’னு, நில்லுன்னா நிக்கணும், உட்காருன்னா உட்காரணுமாம். நல்ல கதையாவுளு இருக்கு? மரியாதைங்கிறது மனசுல இருந்து வரணும், பயத்துல இருந்து வரக்கூடாது.

நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன், ஏன் இடிச்ச புளி மாதிரி அப்படியே உட்கார்ந்திருக்கீங்க? ஏன், ரெண்டு பக்கமும் டமாரமாயிடுச்சா என்ன?”

“சுந்தரு, கண்ணா சுந்தரு… சாப்பிட வரலாம்பா!” என்று சுந்தரின் அம்மா கலா குரல் கொடுத்தாள்.

“இதோ பாரு, அம்மா கூப்பிடுறாங்க, வா போகலாம்” என்றான் சுந்தர்.

“நான் ஒண்ணு சொல்லுறேன்… தத்துபித்துன்னு போயி அங்க எதையாவது உளறி வச்சிராதீங்க” என்றாள் கவிதா.

ஹாலுக்கு வந்ததும், அத்தையைப் பார்த்த கவிதா…

“அத்தை, கொஞ்ச நேரம் முன்னாடியே கூப்பிட்டிருந்தீங்கன்னா, நானும் வந்து கூடமாட ஒத்தாசையா இருந்திருப்பேனுல” என்றாள் கவிதா.

“அம்மாடி, தினமும் எந்த நேரத்துக்குச் சாப்பிடுவோம்னு உனக்குத் தெரியும். அப்படி இருக்கும்போது, நீயே வந்து வேலையை ஆரம்பிச்சிருக்கணும். உன்ன மாதிரிதானே நானும் வேலைக்குப் போயிட்டு வர்றேன்? இப்ப ரிடையர்டு ஆகுற வயதுன்னு கூடப் பார்க்காமல், பஸ்ல ஏறி இறங்கி இந்த அரசாங்க உத்தியோகத்தைப் பார்த்துட்டு இருக்கேன்!” என்றாள் கலா.

“ஏதோ சின்னசிறுசுங்க கொஞ்ச நேரம் தனியாத்தானே இருக்கட்டுமேன்னுதான் உன்னைக் கூப்பிடல!” என்றாள் கலா.

கவிதா வெட்கத்தில் நாணி கோணி நின்றாள்.

“சரிச் சரி, வழியிது; பாரு, தொடச்சுக்கோ” என்று சொல்லிச் சிரித்தாள் கலா.

“அத்தை, உங்களுக்கு எப்போதும் விளையாட்டுத்தான்! வரட்டும் மாமா, வரட்டும்… அங்க போய் உங்களப்பத்திச் சொல்லுறேன்” என்றாள் கவிதா.

“போடாப்பா, அவரு உண்டு, அவரு வேலை உண்டுன்னு இருக்கிறாரு; அவரைப் போய் ஏன் வம்புக்கு இழுக்கிற?” என்று சிரித்தபடி கூறினாள் கலா.

“சரி, வாங்க சாப்பிடலாம்” என்று கலா சொல்ல, அனைவரும் இரவு உணவை முடித்தனர். பின் அவரவர் படுக்கச் சென்றனர்.

கலா தன் கணவன் சுப்புவிடம்…

“ஏங்க, நான் ஒண்ணு சொல்லவா?”

“சொல்லு கலா, என்ன விஷயம், சொல்லு, தயங்காமல்” என்றார் சுப்பு.

“இல்ல, நாம இருக்கிற இந்த வீடு சொந்த வீடுதான் இல்லேன்னு சொல்லல. ஆனா சிங்கிள் பெட்ரூமா போயிடுச்சு. நமக்கு ஒண்ணுமில்ல, நாம இதே ஹாலுல இருந்திடலாம்.”

“ஆனா…”

“என்ன ஆனா! இல்ல, அவங்களுக்கு இப்பதான் கல்யாணம் முடிஞ்சிருக்கு. என்னத்தான் தனி படுக்கை அறை இருந்தாலும், இந்தச் சின்ன இடத்துல அவங்களால சுதந்திரமா இருக்க முடியல.”

“உங்களுக்குப் புரியுதா இல்லையான்னு தெரியல?”

“ஏண்டி, புரியாம? எல்லாம் நல்லா புரியுது. அப்ப நாம ஏன் ஒரு வீடு பார்த்துட்டுப் போயிடக் கூடாது, அவங்க சந்தோஷமா இருக்கட்டுமே” என்றாள் கலா சுப்புவிடம்.

“அதுவும் சரிதான், நம்ம காலத்துக்குப் பின் இந்த வீடு சுந்தருக்குத்தானே. அப்புறம் எடுத்துக்கிறதைவிட, இப்ப அவன் எடுத்துக்கிட்டா என்ன?”

“நாளைக்கு நாம் பேசுவோம் இதைப் பத்தி அவங்க ரெண்டு பேர்கிட்டையும்” என்று பேசியவர்கள் அப்படியே தூங்கிவிட்டனர்.

விடியற்காலை ஐந்தரை மணி ஆனவுடன், கடிகாரம் ஓசையை எழுப்பியது.

தூக்கத்திலிருந்த கலா, ஒலி வந்த பக்கம் திரும்பி கடிகார ஒலியை அணைத்தாள். வேகவேகமாக எழுந்து காலை, மதியத்துக்குச் சமைக்க ஆரம்பித்தாள்.

கவிதாவோ சுமார் 6:30 மணிக்கு எழுந்து, காலைக் கடனையெல்லாம் முடித்த பின் சமையற்கட்டுக்கு வருவாள், கலாவுடன் கூடமாட ஏதாவது வேலை இருந்தால் செய்வாள்.

அந்தச் சமயத்துல முந்தின நாள் இரவு பேசினதை கவிதாகிட்ட முதல்ல சொல்லி, அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமுன்னு பேச்சை ஆரம்பித்தாள் கலா.

“அம்மாடி கவிதா, நானும் உங்க மாமாவும் ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்.”

“என்ன முடிவு அத்தை?”

“இல்ல, நாங்க தனியா வீடு பார்த்துப் போலாமுன்னு.”

“ஏன் இந்த முடிவு? இப்ப என்ன ஆயிப்போச்சுன்னு இந்த முடிவு?”

“நீங்க சின்னஞ்சிறுசுங்க, ஓடியாடி விளையாடுவீங்க, நாங்க எதுக்கு உங்களுக்குத் தொந்தரவா இருக்கணும்?”

“அட என்ன அத்தை, இப்படிச் சொல்லிட்டீங்க, தொந்தரவா! அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல.”

“எங்க ரெண்டு பேருக்கோசரம் நீங்க உங்க அறையை விட்டுக்கொடுத்துட்டீங்க. நான் இங்க வந்த பிறகு நீங்க ரெண்டு பேரும் இந்த ஹாலுலத்தான் படுக்குறீங்க.”

“நாங்க உங்களைக் கேட்கிறோம், எங்களுக்கோசரம் இவ்வளவு செய்ற நீங்க ஏன் தனியா போகணும்? பேசாம நாங்கத் தனிக்குடித்தனம் போயிடுறோம். நீங்க இந்த வீட்டுல ஃபிரியா இருங்க. வாரம் ஆனா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்க ரெண்டு பேரும் இங்க வந்துடுறோம்.

இந்த காலத்துல நீங்க ஏன் வெளியே போய் கஷ்டப்படணும்? இல்லடிமா, நான் என்னச் சொல்லுறேனா, எப்படியும் இந்த வீடு அவனுக்குத்தான். அதை இப்போதே இருந்துவிட்டுப் போறான்.

என்ன, நீங்க பேசுறீங்க, என்ன இப்ப அவசரம்? நான் அவரை ஹௌசிங் லோன் எடுக்கச் சொல்லுறேன். அவரு தள்ளிப்போட்டுட்டே வராரு.

எங்க கம்பெனிக்கு பக்கத்துல நல்ல பிளாட், அருமையான கிரவுண்டு விலைக்கு வருது, அதை வாங்குங்கன்னு சொல்லிட்டே இருக்கேன். காதுலேயே போட்டுக்க மாட்டேங்கிறாரு.

இப்ப இந்த வயசுல வாங்கினாத் தான் முடியும், அப்புறம் காலம் போன காலத்திலையா வாங்குறது? நீங்களே சொல்லுங்க. மாடர்னா, நல்லா அழகா, கேட்டட் கம்யூனிட்டியுடன் இப்பெல்லாம் வீடு கட்டித் தராங்க. இடம் வேண்டாம்னு நினைத்தார்னா, அப்படி ஏதாவது கட்டுன அப்பார்ட்மெண்டில் ஒரு வீடு வாங்கலாமுல்ல. நீங்க கொஞ்சம் அவருகிட்ட எடுத்துச் சொல்லுங்க” என்றாள் கவிதா.

கலாவின் முகம் மாறியது இதைக் கேட்டவுடன். ஆனால், அவள் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அவளாகவே எண்ணலானாள்.

ஆமாம், இந்த வீடு இவங்களுக்கு எப்படி தோது வரும்? இப்ப இருக்கிற டெக்னாலஜியைப் பார்த்தா, இந்த வீடு அதரப் பழசுதானே, அதை நாம் ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும்.

நாம் ஏன் அதைப் பத்தி அவருகிட்ட பேசக் கூடாது? சின்னஞ்சிறுசுங்க, வானத்தில் பறக்குற பறவையாய், இருவரும் கொஞ்ச காலம் சுதந்திரமா வெளியே போய் அவங்க வாழ்க்கையை வாழட்டுமே.

இன்னும் எத்தனைக் காலம் அவங்களை நம்ம கைக்குள்ளேயே வச்சுக்கிட்டு இருக்கிறது என்று யோசித்தவளின் நினைவு, குக்கர் சத்தத்தில் மீண்டும் திரும்பியது அந்தத் தருணத்திற்கு.

-பாலமுருகன்.லோ✍️

Series Navigationமழை புராணம் : 45ஜமீலின் ‘வால் பிடித்தல்’ கவிதைகள்: நுண்ணிய அழகியலும் மனித விளிம்பு நிலை புலன் அனுபவங்களும்