மழைப்பசு
எங்கெங்குமான தெருக்களில்
குடைவெளிகளில் திரியும் மனிதர் சார்பாக
மிகவும் பரிதாபமாக யாசிக்கிறேன்
பதினைந்து நாளாகப் பெய்யும் இம்மழையிடம்
ஈரம் பிளந்து தின்கிறது பூமியை மட்டுமல்ல
இயற்கையின் ஒவ்வொன்றையும். அதோ!
காய முடியாத குருவிச் சிறகுகள்
பிய்யும்படி ஊறி நனைந்து விட்டன
மரங்கள் கொண்ட இலைகளை ஆக்கரமித்த பாதிமழை
இடைவெளி நிமிடங்களில் கூட
சொட்டு மழையாய் உதிர்கிறது ஓரம் நின்றார் மேல்
கொத கொதத்த தரை மேல் பிழிந்து உணர்த்தப்படும் சாக்கு
சதா பிலுபிலுவெனப் பொழியும் சீறல்
வரப்போகும் ஜனத்தொகை
உதிர்க்கப்போகும் கண்ணீரா வானேறியது ?
என்றோர் அச்சம் உதித்தது
கையில் சொட்டும் கிழிந்த பையுடன் ஒரு முதியவர்
சாலைகளாகிய நீர் வழிகள்
வரப்புகள் ஊறிய வயல்
மிதக்கும் ஊர்வெளியில் பொழிந்து மூழ்கிய கிராமப் பாலங்கள்
எல்லாவற்றிலும் பரிதாபமாயிருந்தது
கொல்லைகட்டில் குளிர் இருட்டில் பாயும் தூறல் தாங்காமல்
உடம்பு உதறி சிலிர்த்து சிலிர்த்து
அடங்கும் பசுவின் பார்வையும் அம்மா! எனும் கத்தலும்
***