_ லதா ராமகிருஷ்ணன்.

(தன்னிகரற்ற தனி லயம் என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள, ஈழ இலக்கியம், இசை, திரைப்படம், நாடகம், ஆளுமைகள் பற்றி எழுத்தாளர் – ஆவணப் படத் தயாரிப்பாளர் அம்ஷன்குமார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு (வெளியீடு: காலச்சுவடு, தமிழ்நாடு – தமிழியல் , லண்டன்) குறித்து சென்னையில் போதிவனம் பதிப்பக அலுவலகத்தில் ஆகஸ்ட் 22 அன்று ஓர் அறிமுகக்கூட்டம் நடந்தது. போதிவனம் கருணா பிரசாத் வரவேற்புரை வழங்கி கூட்டத்தை ஒருங்கிணைக்க, எழுத்தாளர்கள் வெளி ரங்கராஜன், எஸ்.சண்முகம், இ.ஜே.சுந்தர் மற்றும் நான்(லதா ராமகிருஷ்ணன்) நூல் குறித்த கருத்துகளை முன்வைத்து உரையாற்றினோம். திரு. அம்ஷன்குமாரின் ஏற்புரையோடு கூட்டம் நிறைவடைந்தது. விழாவுக்கு எழுத்தாளர் – மொழிபெயர்ப்பாளர் அமரந்த்தா, கவிஞர் ஹவி போன்றோர் வருகை தந்திருந்தனர். கூட்டத்திற்கு வந்திருந்தோர் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், நூல் குறித்து அவையில் அகல்விரிவான பார்வைகளும், விவாதங்களும் இடம்பெற்றன.
நூல் குறித்து இக்கூட்டத்தில் நான் முன்வைத்த கருத்துகளை ஒரு கட்டுரையாக இங்கே தந்துள்ளேன்.)

ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை முன்வைத்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் அடங்கிய நூல் என்றால் அதைத் திறனாய்வு செய்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட கருப்பொருள் குறித்துத் தெரிந்திருக்க வேண்டும். அந்த கருப்பொருள் குறித்த ஆர்வம் இருக்கவேண்டும். அப்போதுதான் அந்தக் கட்டுரைகளில் முன்வைக்கப் பட்டுள்ள கருத்துகளை, கன்ணோட்டங்களை ஒட்டியும் வெட்டியும் கருத்துரைக்க முடியும். உதாரணத்திற்கு, சினிமா, நாடகம் , ஆவணப்படம் ஆகிய கலைப்பிரிவு களின் நகர்வுகளை, போக்குகளை அறிந்திருந்தால் மட்டுமே அவை குறித்து காத்திரமான கருத்துகளை முன்வைக்க முடியும். எனக்கு சினிமா, நாடகம், ஆவணப்படம் ஆகிய கலைத்துறைகள் அவ்வளவு பரிச்சயமானவையல்ல. ஆனால், அம்ஷன்குமார் என்ற கலை, இலக்கியவாதியின் இத்தனை வருட கால ஆரவார மற்ற, ஆய்வுபூர்வமான எழுத்துப்பணியை, ஆவணப்படச் செயல்பாடுகளை நான் அறிவேன். சிற்றிதழ்களிலும், இடைநிலை இதழ்களிலும் வெளியான அவரது எழுத்தாக்கங்களை வாசித்துள்ளேன். அவறில் காணப்படும் ஆழம், நேர்மை அவர் கூறும் கருத்துகளைப் பொருட்படுத்திக் கேட்கவைக்கிறது; வாசிக்கவைக்கிறது. அந்த வாசிப்பின் மூலம் புதிய பல விஷயங்கள் ஒரு வாசகராக எனக்கு வரவாகின்றன.
இத்தொகுப்பில் உள்ள அம்ஷன்குமாரின் கட்டுரைகளில் ஒரு கருப்பொருளைப் பற்றி, ஓர் ஆளுமையைப் பற்றி அவர் எழுதியிருக்கும் அகல்விரிவான விதமே அவர் சம்பந்தப்பட்ட கருப்பொருள், ஆளுமை குறித்த விவரங்களை மேலோட்டமாக அல்லாமல் தீர்க்கமாக அறிந்தவர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. . அம்ஷன்குமாரின் கட்டுரைகளில் உள்ள முக்கிய அம்சம் – கையிலுள்ள விஷயத்தை நூலாசிரியர் கட்டுக்கோப்பாக அணுகுகிறார்; எடுத்துரைக்கிறார். கட்டுரைகளில் பேச எடுத்துக்கொண்டுள்ள கருப்பொருட்களினூடாக தன்னை முன்னிறுத்திக்கொள்ள முற்படுவதில்லை.
சாகித்ய அகாதெமியில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இலக்கிய சந்திப்பில் மாற்றுத்திறனாளி எழுத்தாளர்களுக்கென்று ஒரு தனி அமர்வு இடம்பெற்றதாகத் தகவல் கிடைத்தது. இவ்வாறு தனி அமர்வு ஏற்பாடு செய்வதில் சாதகமான விஷயம் நிறைய மாற்றுத்திறனாளிப் படைப்பாளிகளுக்கு இலக்கிய சந்திப்பில் பங்கேற்க முடியும். பாதகமான விஷயம் மற்றவர்கள் அந்த அமர்வை அறவே புறக்கணித்துவிடவும் கூடும். அதுபோலவே, ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைப் பற்றிப் பேசும் கட்டுரைகள் இடம்பெறும் தொகுப்புகளை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று – கலை, இலக்கியம், சமூக, அரசியல் சார்ந்து, தனி மனித அனுபவங்கள் சார்ந்து எழுதப்படும் கட்டுரைகள் இடம்பெறும் தொகுப்பு. ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்து எழுதப்படும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. இரண்டாம் வகை கட்டுரைத்தொகுப்பு அதன் பிரதான கருப்பொருளோடு பரிச்சிய மில்லாத வாசகருக்கு அலுப்பூட்டுவதாயும் அமையலாம். அதுவே, பரிச்சியமில்லாத ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வழிவகுக்கிறது என்பதால் ஆர்வமூட்டுவ தாகவும் அமையலாம். இத்தகைய ஒரே கருப்பொருளில் அமைந்த கட்டுரைகள் இடம்பெறும் தொகுப்பு மூலம் வாசகரிகளால் ஒரு துறையை, ஓர் ஆளுமையைப் பற்றி நன்றாக, அகல்விரிவாக அறிந்துகொள்ள முடியும். இந்த அறியும் ஆர்வத்தை, பொருட்படுத்தி வாசிக்கும் ஆர்வத்தை வாசகரிடம் ஏற்படுத்துவது நூலாசிரியரின் நோக்க நேர்மை, அறிவாற்றல், நுனிப்புல் மேயாத்தனம், அவருடைய ஆளுமைப் பண்புகள்.
அம்ஷன்குமாரின் இத்தொகுப்பு மேற்குறிப்பிட்ட இரண்டாம்வகையானது. இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகள் எடுத்துக்கொண்ட கருப்பொருள்களினூடாக ஈழத்தமிழரின் வரலாறை, அவ்ர்தம் பண்புநலனை, பழக்கவழக்கங்களை, எடுத்துரைக்கின்றன. மிகையுணர்ச்சி அற்ற தொனியில் கட்டுரையாசிரியர் விஷயங்களைச் சொல்வதே அந்தக் கருப்பொருள்களுக்கு அதிக ஆழத்தையும் அடர்த்தியையும் தருகிறது எனலாம். அவருடைய இந்தக் கட்டுரைத்தொகுப்பின் தலைப்பை – தன்னிகரற்ற தனி லயம் – முதலில் படித்தபோது தலைப்பு இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந் திருக்கலாமே என்று தோன்றியது (எளிமை என்பதே highly relative term தான் என்பதும் குறிப்பிடத்தக்கது) ஆனால், இந்த நூலில் அவர் பேச எடுத்துக்கொண்டுள்ள விஷயங்கள், ஆளுமைகளைப் பார்க்கும்போது இந்தத் தலைப்பின் பொருத்தம் புரிகிறது. ‘இலக்கிய சாட்சியங்களாய் குந்தவையின் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் அவருடைய அவதானிப்புகளை உதாரணங்காட்டலாம்.
“1963இல் ஆனந்தவிகடனில் பிரசுரமான அவருடைய முதல் கதையைப் பற்றிக் கட்டுரையின் ஆரம்பத்தில் “ தமிழகத்தின் ஜனரஞ்சகமான வார இதழ் ஒன்றில் பிரசுரமாவதற்கான தகுதிகள் அனைத்தும் அக்கதைக்கு இருந்தன. கூடவே, ஒரு புதிய நிலைக்களன் கொண்ட கதையாகவும் அது இருந்தது” என்று குந்தவை தரமான எழுத்தாளராக உருவாவதற்கான சாத்தியப்பாட்டை எடுத்துரைக்கும் நூலாசிரியர் கட்டுரையின் இறுதிப்பகுதியில் “குந்தவையின் கதைமனிதர்கள் தங்களை மீட்டெடுத்துக் கொள் பவர்களாக உள்ளார்கள். அம் மீட்டெடுத்தலை அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து செய்கிறார்கள். உடைமைகள், உற்ரார்கள், சுமுகமான எதிர்காலம் என எல்லாவற் றையும் ஒருசேர இழந்தாலும் தாங்கள் போற்றிப் பாதுகாத்த விழுமியங்களை இழக்காது மீண்டும் நன்பிக்கையுடன் வாழ்வினைத் தொடரும் மக்களைக் குந்தவை நம்முன் நெருக்கமாக உலவவிடுகிறார். இது ஈழத்தமிழர்களின் ஒட்டுமொத்தமான குணநலன் என்று சந்தேகத்துக்கிடமின்றி கூற முடியும்” என்கிறார்.
ஒரு கட்டுரையாளரிடம் ‘இவரைப் பற்றி ஏன் எழுதவில்லை – இவரை ஏன் விட்டு விட்டீர்கள்’ என்று கேட்பது சரியல்ல. படித்தவற்றில் பிடித்தனவற்றைப் பற்றி எழுதுவதால் நூலாசிரியர் மற்றவற்றைப் பொருட்படுத்துவதில்லை என்று ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்? பேச எடுத்துக்கொண்ட நூல்கள், படைப்பாளிகள் யாரென்று பார்க்கும்ப்பொது, அவர்களுடைய எழுத்துக்களினூடாக விரியும் இலங்கைத் தமிழர்களின் வரலாறை, துயரை, போராட்டங்களை, நம்பிக்கைகளைப் படிக்கும்போது நூலாசிரியரின் எழுத்து சார் விழுமியங்களை நம்மால் உணர முடிகிறது. அவருடைய தேடலின், வாசிப்பின் வீச்சும் விரிவும் புலப்படுகின்றன.
ஓவியம் தவிர்த்து மற்றெல்லா கலை, இலக்கியத் துறைகளிலும் ஈழத்தமிழ் புனைவு, அ-புனைவு எழுத்தாளர்களின் சீரிய பங்களிப்புகளை இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன எனலாம். எதிர்மறை விமர்சனமாக எழுதப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் இடம்பெறவில்லை என்று தோன்றுகிறது. மதிப்புக்குரிய எழுத்தாளர்களை, ஆளுமைகளைப் பற்றி மட்டும் பொருட்படுத்தி எழுதுவதே ஒருவகையில் அழுத்தமான விமர்சனப்பார்வை, அணுகுமுறை தான். தவிர, இந்தக் கட்டுரைகள் எல்லாவற்றிலும் ஈழத்தமிழர்கள் தங்கள் மண்ணில் நடத்தப்பட்ட விதம் குறித்த எதிர்ப்பு கட்டுரையாசிரியரின் விமர்சனப்பார்வையாக இரண்டறக் கலந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஷோபா சக்தியின் ‘இக்சா’ பற்றிச் சொல்லும்போது ‘மொழி குறித்தான அனுபவங்கள் இந்நாவலில் புதிய கோணங்களில் பதிவாகியுள்ளன’ என கதைக்குள் ஊடாடும் விஷயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் அம்ஷன்குமார். ‘எனது நினைவுகளில் கி.பி.அரவிந்தன்’ என்ற தலைப்பிட்ட கட்டுரையில் அரவிந்தனின் சிறை அனுபவம் குறித்த தகவல்கள் கட்டுரையாசிரியரின் அதிராத தொனியில் தரப்படுவதே வாசகரை அதிகம் உலுக்கியெடுக்கிறது எனலாம்.
பேராசிரியர் மு.நித்தியானந்தன் தனது அணிந்துரையில் ‘இலங்கையின் கலை, இலக்கியத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் ‘ஒரு பெரியண்ணன் பார்வை’ தொடர்ந்து நிலவி வந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதே பார்வை இந்தியா விலுள்ள தமிழ்ப் படைப்பாளிகள் குறித்து இலங்கைத்தமிழ் படைப்பாளிகளுக்கு, குறிப்பாகத் திறனாய்வாளர்களுக்கு, இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். ‘தமிழகத்தில் போர்ச்சூழல் பற்றியெல்லாம் அறியாதவர்கள் மேம்போக்காக எழுதுகிறார்கள், தனிமனித உணர்வுகளையே இலக்கியமாக எழுதுகிறார்கள்’ என்று பல வருடங்களுக்கு முன்பு தினமணிக்கதிரில் எழுத்தாள்ர் டொமினிக் ஜீவா கருத்துரைத்திருந்ததற்கு ‘ பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழிந்துதான் எங்கள் படைப்புகளில் ஆழமும் அடர்த்தியும் கூடவேண்டுமென்றால் அது எங்களுக்கு வேண்டவே வேண்டாம்’ என்பதாக நான் எதிர்வினையாற்றியிருந்ததும் நினைவுக்கு வருகிறது.
வாழ்வனுபவங்கள் என்பன எந்தவொரு படைப்புக்கும் வலு சேர்ப்பது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவியலாது. கவிஞர் பிரம்மராஜன் மூலம் வாசிக்கக் கிடைத்த இத்தாலிய எழுத்தாளர் ப்ரைமோ லெவியின் சிறுகதைகளை மொழிபெயர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது, யூதர் என்ற காரணத்தால் வதைமுகாமில் அடைக்கப்பட்டு, Chemist என்பதால் சில விஷயங்களுக்காக நச்சுப்புகை அறைக்கு அனுப்பாமல் விடப்பட்ட ப்ரைமோ லெவி பின்னர் வெளியே வந்ததும், ஹிட்லரின் Auschwitz வதைமுகாமில் தன் கண்ணெதிரே தன் சகவுயிர்கள் அனுபவித்த உடல்ரீதியான, மனரீதியான சித்ரவதைகளை வெளியுலகத்திற்குச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே எழுத்தாளரானவர் அவருடைய கதைகளைப் படித்த போது ஒரு வாசகராக கண்முன் ஒரு காலகட்டத்தின் கொடிய வரலாறு விரிந்து அதிர்ந்துபோகச் செய்தது. ஆனால், எந்தவொரு வாழ்வனுபவமும் – அது தனிமனி தனைச் சார்ந்ததோ, சமூகஞ்சார்ந்ததோ – அதை எழுதுபவரின் எழுத்தாற்றல், நோக்கநேர்மை ஆகியவற்றைப் பொறுத்தே ஆழமானதாகிறது; மேம்போக்கானதா கிறது.
இந்தத் தொகுப்பின் இறுதிக்கட்டுரை ‘எரியும் நினைவுகள்’ யாழ்ப்பாண பொதுசன நூலகம், அதிலுள்ள 97,000 புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்ட அவல நிகழ்வைமூன்றே பக்கங்களில் அத்தனை ஆழமாக எடுத்துரைக்கிறது. ‘ஒரு நூல் ஒரு தனி மனிதனின் எண்ண வெளிப்பாடு என்றால் பெரும் நூலகம் மனித குல நாகரிகத்தின் கருவூலம்’ என்ற அம்ஷன்குமாரின் அவதானிப்பு அத்தனை கருத்துச்செறிவார்ந்தது!
ஏ.ஜே.கனகரத்னா குறித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரையில் அம்ஷன்குமார் இவ்வாறு கூறுகிறார்: “அவரது கட்டுரைகள் எல்லாமே அளவில் சிறியன. பொதுவாக ஐந்து பக்கங்களை மீறாதவை. ஒரு பத்திரிகையாளராகப் பணிபுரிந்த அனுபவத் தினால வார்த்தைகளைக் கணக்கிட்டு எழுதும் கட்டுப்பாடு அவரை வந்திருக்கக் கூடும். தான் படித்த நூல்களை அறிமுகம் செய்விப்பது போன்ற தொனியில் அவை எழுதப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை எவ்வாறு என்கிற விமர்சனப் பார்வைக் கோணத்தை அவர் தொடர்ந்து முன்வைக்கிறார்”. இந்த வரிகள் அம்ஷன்குமாரின் கட்டுரைகளுக்குமானது எனலாம்.
புனைவு , அ-புனைவு என்ற இருவகை எழுத்தாக்கங்களில், புனைவில் பல பேர் வந்தாலும் அவர்கள் உண்மையில் கதாசிரியராகிய ஒருவரே. அவர்களுடைய எண்ணங்கள், செயல்பாடுகள் பெரும்பாலும் Hypothetical, assumptions. அப்படியில்லாமல், அ-புனைவு எழுத்துகளில் எழுதுபவர் – எழுதப்படுபவர்/கள் ஆகிய இருதரப்பினருமே alive and breathing – either now or in the past ; once upon a time. எனவே, அ-புனைவு எழுத்துகள் கூடுதல் பொறுப்பு வாய்ந்தது என்று சொல்ல முடியும். அதை உணர்ந்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் அடங்கிய இந்நூலுக்காக கட்டுரையாளர் அம்ஷன்குமார் பாராட்டப்படவேண்டியவர்.
- சோனா மானா
- மழை புராணம் : 48
- நிழலின் பயம்
- மாய ஜீவிதம்
- காலத்தின் கையொப்பம்
- இரண்டாவது நிழல்
- கால மாற்றம்
- சாட்சியாக இரு
- விட்டுச் சென்ற வாழ்க்கை
- மறைச்சொல்
- அம்ஷன்குமாரின் ஆரவாரமற்ற கலை, இலக்கியப் பங்களிப்பு – தன்னிகரற்ற தனி லயம்