This entry is part 8 of 9 in the series 27 செப்டம்பர் 2026

ஜமீல்

கொழும்பின் வெயில் தணிந்த கோடை இரவு தன் கனத்த, ஈரமான சிறகுகளை மெதுவாக விரித்துக்கொண்டு மருதானையின் நூற்றாண்டு பழமையான கட்டிடங்களின் மீது அமர்கிறது. பகலெல்லாம் வீசிய சுட்டெரிக்கும் காற்று தணிந்து, சிமெண்ட் சுவர்களும் தார்ச் சாலைகளும் தாங்கள் உறிஞ்சி வைத்திருந்த வெப்பத்தை மெல்ல மெல்ல வெளியேற்றிக் கொண்டிருக்கும் நேரமிது. வானத்தில் மின்மினிகள் போல மின்னும் நட்சத்திரங்கள் இன்று தங்களின் இயல்பான கண் சிமிட்டலை மறந்துவிட்ட விசித்திரமான ஒரு சாட்சியாய் உறைந்து நிற்கின்றன. அந்த நட்சத்திரங்கள் உண்மையிலேயே கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் விண்மீன்கள்தானா அல்லது இந்த நகரத்தின் பிரம்மாண்டமான மெய்நிகர் திரையில் செயற்கையாக வரையப்பட்ட உறைந்துபோன ஒளிப் புள்ளிகளா என்ற ஐயம் மனதின் ஏதோ ஒரு மூலையில் எழுகிறது. தூரத்தில் ஆகாயத்தை நோக்கி உயர்ந்து நிற்கும் தாமரைக் கோபுரத்தின் வண்ண விளக்குகள் ஒவ்வொரு நொடியும் நீலம், சிவப்பு, பச்சை என மாறிக் கொண்டே இருக்கின்றன. இந்த நகரின் எண்ணற்ற ஆசைகளும், பூர்த்தி செய்யப்படாத கனவுகளும், மேலெழுந்தவாரியான போலித்தனங்களும் அந்த வண்ண வெளிச்சத்தில் பிரகாசமாகப் பிரதிபலிக்கின்றன.

​விடுதியின் குறுகிய, தூசி படிந்த பல்கனியில் நின்றுகொண்டு அணைந்துவிட்ட சிகரெட்டின் சாம்பலை கீழே தட்டும் தருணத்தில், காலத்தின் நகர்வு சற்று பின்னோக்கிச் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கையில் இருக்கும் புகையிலையின் கசப்புச் சுவையும், நகரின் இரவுக் காற்றும் ஒன்றாகக் கலக்கின்றன.

​தொலை தூரத்தில் எங்கோ ஒரு பழமையான, விளக்கு வெளிச்சம் மங்கிய தேநீர்க்கடையில் இருந்து இலங்கை வானொலியின் மெல்லிய ஒலி அலைகள் காற்றில் மிதந்து வருகின்றன. அறுபதுகளின் அல்லது எழுபதுகளின் பொற்காலத்தைச் சேர்ந்த அந்தப் பழைய தமிழ் பாடலின் வரிகள் என் நினைவின் அடுக்குகளில் புகுந்து, எனக்குள்ளே உறங்கிக்கொண்டிருந்த பழைய மனிதனைத் தட்டி எழுப்புகின்றன. நான் அறியாமலேயே என் உதடுகள் அந்த வரிகளைத் தன்னிச்சையாக முணுமுணுக்கத் தொடங்குகின்றன. உடலும் மனதும் அந்த இசையின் ஆழமான அமைதியில் மெய் மறந்து, இந்த ஒட்டுமொத்த நாளின் சலசலப்புகளிலிருந்தும் விடுபெற்று காலாற ஓய்வெடுக்கும் அந்த ஒரு வினாடி, நகரின் மற்றொரு கொடூரமான நிஜம் என் நாசித்துவாரங்களை வந்தடைகிறது.

​மருதானைச் சந்தியில் இருக்கும் பிரதான கழிவு நீர் குழாய்கள் உடைந்த வழியே, பல நாட்களாகத் தேங்கிக் கிடந்த கழிவு நீர் பொங்கி வழிந்து வீதியின் பள்ளம் படு குழிகளில் உறைந்து கிடக்கிறது. கொழும்பு துறைமுகத்தை நோக்கி வீசும் ஈரமான கடல் காற்று, அந்த அழுகிய கழிவு நீரின் தாங்க முடியாத துர்நாற்றத்தை நகரின் மூலை முடுக்கெல்லாம் பரப்புகிறது. அந்த துர்நாற்றம் நாசியை அடைத்துத் தொண்டையைக் கவ்வும்போது, இந்த இரவின் மீது நாம் புனைந்து வைத்திருக்கும் அழகியல் ஒரு பொய்யான முகமூடி என்பது பளிச்சென்று புரிகிறது. இரவு என்பது வெறுமனே கவிதைகளுக்கான இருள் மட்டுமல்ல, கவிஞர்கள் வர்ணிக்கும் காமமும் காதலும் மட்டுமே நிறைந்த களமும் அல்ல. அது மனிதர்களின் தினசரி கழிவுகளையும், நவீன நகராக்கத்தின் மறைக்கப்பட்ட அருவருப்புகளையும் சுமந்து நிற்கும் ஒரு பெரிய சாக்கடைத் தொட்டி என்பதை அந்த நாற்றம் அடிவயிற்றிலிருந்து நினைவூட்டுகிறது. நறுமணத்திற்கும் துர்நாற்றத்திற்கும் இடையிலான இந்த எல்லைக்கோடு எவ்வளவு பலவீனமானது, எவ்வளவு தற்காலிகமானது என்பதை இந்த நகர்ப்புறக் காற்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. கலையின் அழகும் மனித வாழ்வின் அருவருப்பும் ஒரே காற்றில் கலந்து இந்த நகரத்தின் சுவாசமாய் மாறி நம் நுரையீரலுக்குள் இறங்குகின்றன.

​திடீரென, அமைதியை உறைவிடமாகக் கொண்ட காலி வீதியின் திசையிலிருந்து அதிவேகமாகப் பறந்து சென்ற ஒரு நவீன சொகுசு மகிழூந்தின் டயர்களின் உராய்வுச் சத்தத்தைத் தொடர்ந்து, ஒரு பூனை கதறுகிறது. அந்த அனாதை பூனையின் அந்திமக் குரல் முழு இரவையும் ஒரு கணம் தூக்கி வாரிப்போட வைக்கிறது. குருதி வழிய குற்றுயிராய் தார்ச் சாலையில் கிடக்கும் அந்தப் பூனையின் அலறல், இந்த நகரத்தின் இரக்கமற்ற வேகத்திற்கும் இயந்திரத்தனமான பயணத்திற்கும் முன்னால் ஒரு சிறிய அதிர்வை மட்டுமே ஏற்படுத்திவிட்டு அப்படியே அடங்கிப்போகிறது. வாகனத்தின் சிவந்த பின் விளக்குகள் இருளைக் கிழித்துக்கொண்டு தொலைவில் மறைந்துவிட, பூனையின் எஞ்சிய உயிரும் அந்தச் சூடான தார்ச் சாலையில் மெல்ல மெல்ல உறைந்துபோகிறது. நகரங்கள் மனிதர்களின் உணர்ச்சிகளை மட்டுமல்ல, தங்களை நம்பி வாழும் எளிய உயிரினங்களின் மூச்சையும் மிகச் சாதாரணமாக நசுக்கிவிட்டு, எந்தக் குற்ற உணர்ச்சியும் இன்றி முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றன. அந்தப் பூனையின் கடைசி அலறல் ஒரு தனி உயிரியின் ஒலியா அல்லது இந்த நகரத்தின் இதயமற்ற தன்மையின் கத்தலா என்ற கேள்வி காற்றில் மிதந்தபடி கரைந்து போகிறது.

​விடுதியின் முன்றலில் அடர்ந்த நிழல் விரித்து நிற்கும் வயது முதிர்ந்த வாகை மரம், இந்த நகரின் பல தலைமுறைக் காலத்து ரகசியங்களைத் தன் மரப்பட்டைகளுக்குள் ஒளித்து வைத்திருக்கும் ஒரு மௌன சாட்சியாய் நிற்கிறது. அதன் விரிந்த கிளைகளின் கீழிருக்கும் அடர்ந்த புதரினுள், யாரோ ஒரு முகமறியா நபருடன் ஒதுங்கும் ஒரு விலை மாது இந்த இரவை முற்றிலும் அம்மணமாக்குகிறாள். அவளது வறுமையும், பசியும், இந்த நகரின் ஆண்களின் தீராத காமப் பசியும் சந்திக்கும் அந்த இருண்ட புதரின் மறைவு, இந்தச் சமூகம் போர்த்தி வைத்திருக்கும் போலியான ஒழுக்கங்களையும் கலாச்சாரக் காவலர்களின் முகமூடிகளையும் ஒரே இழுப்பில் உரித்துப் போடுகிறது.

​பணத்திற்காக விற்கப்படும் உடல்களும், காமத்திற்காக அலையும் மனங்களும் இந்த வாகை மரத்தின் நிழலில் தங்களின் போலி அடையாளங்களை இழந்து, வெறும் மனித மிருகங்களாக மாறுகிறார்கள். இரவு அவர்களின் ரகசியங்களைப் பத்திரமாக மறைக்கும் பாதுகாப்பான ஆடையாகவும், அதே வேளையில் அவர்களின் ஆன்மீக நிர்வாணத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் ஒரு பெரிய கண்ணாடியாகவும் ஒரே நேரத்தில் செயல்படுகிறது. அவளது உடலின் ஒவ்வொரு அவசர அசைவும், நகரின் பொருளாதார அமைப்பின் சீர்கேட்டையும், எளிய மனிதர்களை அது எவ்வாறு விளிம்புநிலைக்குத் தள்ளுகிறது என்பதையும் உரக்கப் பேசுகிறது.

​மறுபுறம், நகரின் இதயப் பகுதியான புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது. ஊருக்கான கடைசிப் பேருந்தையும் தவறவிட்ட மனிதர்கள் மிகப் பதற்றத்துடனும் சோகத்துடனும் அலைந்துகொண்டிருக்கிறார்கள். தங்களின் வீடுகளுக்கும், காத்திருக்கும் குழந்தைகளுக்கும், சொந்த ஊர்களுக்கும் செல்ல முடியாமல் போன அந்த எளிய தொழிலாளர்கள், இன்றிரவு தங்களின் களைத்துப் போன உடலைச் சாய்ப்பதற்கு தோதான ஒரு சிறிய இடத்தை தேடி அலைகிறார்கள். மூடிய கடைகளின் தூசிகளுள்ள வராந்தாக்களிலும், காசாசை பிடித்த நடைபாதைகளிலும் சாய்ந்துகொண்டு அவர்கள் இரவின் மூடிய கதவுகளைத் தட்டுகிறார்கள்.

​அவர்களுக்கு இந்த இரவு ஒரு கவித்துவமான அனுபவமோ அல்லது ரசிப்பதற்கான காலமோ அல்ல மாறாக, அது சுவர்களற்ற ஒரு பெரிய அகதி முகாம். பேருந்தைத் தவறவிட்ட பதற்றமும், அணைத்துக்கொள்ள ஆளற்ற தங்குமிடம் இல்லாத ஏமாற்றமும் அவர்களின் நெற்றிச் சுருக்கங்களில் ஆழமாகப் படிந்திருக்கின்றன. அந்த மனிதர்களின் நடுத்தரக் கனவுகள் யாவும், பூட்டப்பட்ட பேருந்து நிலையத்தின் இரும்புக் கம்பிகளுக்கு பின்னால் சிறைபிடிக்கப்பட்டு கிடக்கின்றன.

​அதே வீதியின் ஓரத்தில், ஓரளவு வெளிச்சம் வரும் தெருவிளக்கின் கீழ், ஒரு இளைஞன் தன் கையில் இருக்கும் திறன்பேசியின் வெளிச்சத்தைக் கொண்டு ஏதோ ஒன்றை மிகத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கிறான். அவன் தவறவிட்ட மிக முக்கியமான ஏதோ ஒன்றை அந்த இருண்ட வீதியில் தனியாகத் தேடுகிறான். அந்தத் திறன்பேசியின் சிறிய, கூர்மையான வெளிச்சக்கற்றை வீதியின் அழுக்குகளையும், பிளாஸ்டிக் குப்பைகளையும், உலர்ந்துபோன எச்சில்களையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

​அவன் அந்த வெளிச்சத்தைக் கொண்டு இந்த இரவை ஒரு டிஜிட்டல் திரையைப் போல வாசிக்கிறான். அவன் தேடுவது உண்மையிலேயே தொலைந்துபோன வாகனச் சாவியா, பணப்பையா அல்லது இந்த பிரம்மாண்டமான கொழும்பு நகரின் நெரிசலில் தொலைந்துபோன அவனது சொந்த அடையாளமா என்ற வினா நமக்குள்ளே எழுகிறது. அவனது வேகமான விரல்களும், போனின் நீல நிற ஒளியும் இரவின் ரகசிய அடுக்கமைவுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்துப் பார்க்கின்றன. அவன் தேடும் பொருள் அவனுக்குக் கிடைக்குமா அல்லது அவன் இந்த இரவின் இருளிலேயே ஒரு துண்டாக்கப்பட்ட, முகவரியற்ற எழுத்தாக மாறி விடுவானா என்பது அந்த இரவுக்கே வெளிச்சம்.

​இப்படி கொழும்பு நகரின் இன்றைய இரவும் எதிரும் புதிருமான நிகழ்வுகளாலும், தீர்க்க முடியாத முரண்பாடுகளாலும் நிரம்பி வழிகிறது.

​ஒருபுறம் பழைய பாடலின் இனிமையான ஆத்மார்த்தமான இசை மறுபுறம் கழிவு நீரின் சகித்துக்கொள்ள முடியாத அருவருப்பான துர்நாற்றம்.

​மறுபுறம் அனாதைப் பூனையின் இரக்கமற்ற மரண ஓலம் மறுபுறம் வாகை மர நிழலில் நடக்கும் காமத்தின் ரகசிய வியாபாரம்.

​இன்னொருபுறம் தங்குமிடம் தேடி நடைபாதையில் சாயும் வீடற்ற மனிதர்கள் மேலும் போன் வெளிச்சத்தில் இரவை வாசிக்கும் தனிமை விரும்பியான இளைஞன்.

​இந்த நகர்ப்புற இரவு தன் வழக்கமான முரண்பாடுகளையும், அமைதியான வன்முறைகளையும், மனித சோகங்களையும் தன் ஆழமான இருளுக்குள் புதைத்துக் கொண்டு, எதையும் பொருட்படுத்தாமல் வழக்கம்போல மறுநாள் காலையின் வெளிச்சத்தை நோக்கி மெல்லப் புலர்கிறது.

Series Navigationகலைஞனின் மறுபக்கம்ஹைக்கூக்கவிதைகள்